Monday, November 2, 2009

புளியங்குடியும் நானும்...

என் சிறு வயதின் ஊர் சுற்றல்கள் எல்லாம் என் அம்மாவின் ஊராகிய புளியங்குடிக்கும் என் ஊராகிய (அப்பா ஊரு தான் எல்லாருக்கும் சொந்த ஊர் இல்லையா??) சுரண்டைக்கும் இடையே தான் நிகழும். எனக்கு புளியங்குடிக்கு போவது என்றால் அவ்வளவு இஷ்டம் ஏன் என்றால் அங்கே சென்று விட்டால் அம்மாவும் சரி அப்பாவும் சரி அவ்வளவு கெடு பிடியாக இருக்க மாட்டார்கள்... எவ்வளவு சேட்டைகள் செய்தாலும் எனக்கு விழ போகும் அடிகளை மாமாவோ இல்லை பெரியம்மாவோ இல்லை அண்ணன்கள் மாமா பையன்களோ தடுத்து விடுவார்கள் அல்லது குறைந்த பட்சம் குறைத்து விடுவார்கள்..


இது போகவும் எனக்கு ஏன் அங்கே போக பிடிக்கும் என்றால் அங்குள்ள வயல்களும் தோப்புகளும் தான்... இங்கே சுரண்டையை போல் வீட்டுக்கு அருகில் அல்லாமல் ஒரு ஆறு கிமீ செல்ல வேண்டும்... அவை எல்லாமே ஊருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும்... அப்போதே எனக்கு மலையும் காடுகளும் பிடித்த விஷயமாகவே இருந்து வந்தன. காட்டுக்குள் உள்ள கருப்பசாமி கோவில் அங்கே ஓடி வரும் ஆறு என்று என்னை மகிழ்விக்கும் அத்தனையும் அங்கே இருந்தது. வருடம் ஒரு முறை குடும்பத்துடன் கருப்பசாமி கோவிலுக்கு போவது mandatory.. அம்மா பெரியம்மாக்கள் அத்தைகள் பாட்டிகள் அக்காமார்கள் எல்லாரும் சாமி கும்பிட்டு ஆடு வெட்டிய பின் அதை சுத்தம் செய்து சமையலில் மும்முரமாக இருப்பார்கள்... தாத்தாவில் ஆரம்பித்து குடும்பத்தில் உள்ள அனைத்து ஆண்களும் இந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.எத்தனை கேன்கள் இருந்தாலும் அது பத்தாது,ஒரே சத்த காடா இருக்கும்...

நானும் எனது அண்ணன் தம்பிகள் மாமா மக்கள் எல்லாரும் ஆற்றுக்கும் இறங்கி கும்மாளம் போட்டு கொண்டு இருப்போம்... அது தான் சிறு வயதின் எல்லாம்..

வேற என்ன வேண்டி இருக்கும் அப்போது??

புளியங்குடி மக்களின் வாழ்க்கை முறையும் இந்த வயல்களும் பின்னி பிணைந்தவை.அவர்களின் வயல் வேலைகள் சார்ந்தே அவர்களின் தினசரி வேலைகளும்.(அவர்கள் வயல் என்று சொல்ல மாட்டார்கள். காடு என்றே சொல்வார்கள்). தினமும் காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து ஆறு மணிக்குள் வயலுக்கு போய் சேர்ந்து வேலையை ஆரம்பித்து விடுவார்கள். எல்லார் வீட்டிலும் மாட்டு வண்டி இருக்கும்.. (இப்பொது டிராக்டர்). மாடு வண்டி எல்லாம் தயார் செய்து ஐந்து மணிக்கும் எல்லாம் கிளம்பி விடுவார்கள். சமையல்?? அது எல்லாம் காட்டில் தான்.அங்கயே பாத்திரம் பண்டம் எல்லாம் இருக்கும் பம்ப் செட்டில். வீட்டில் இருந்து அங்கே எடுத்து செல்ல படுவது அரிசி மட்டும் தான், சமயத்தில் அதுவும் அங்கயே தயார் செய்ய படும். காய்கறிகள்?? அங்கே இல்லாததா??

அம்மாவின் ஊரில் முக்கியமாக பயிரிட படுபவை எலுமிச்சையும் நெல்லும் தான்.நெற்பயிரின் வாசனையும் அந்த எலுமிச்சை தோப்புக்குள் நுழையும் பொது வீசும் வாசமும் போல் என்னை இன்னும் எந்த வாசனையும் வசீகரிக்கவில்லை.இன்றும் நான் பயன் படுத்தும் perfume, citrus/lemon based தான்...

என் பெரியம்மாவும் இரண்டு வருடம் முன் இறந்து விட்டார்கள். அக்கா அண்ணன்கள் எல்லாம் துபாய் பஹ்ரைன் என்று ஆளுக்கு ஒரு பக்கம்.. மாமா அத்தைகள் எல்லாம் சிறு குடும்ப பிரச்சினையில் சரியாக எங்கள் வீடுடன் பேசுவதில்லை.. இந்த வருடம் தீபாவளிக்கு என் நச்சரிப்பின் காரணமாக நானும் அம்மாவும் புளியங்குடிக்கு சென்றோம். நலம் எல்லாம் விசாரித்து விட்டு பாட்டியிடம் கேட்டேன், தோப்பு எல்லாம் எப்படி இருக்கு பாட்டி? என்று. உங்க மாமன்காரங்க தான் எல்லாத்தையும் வித்துட்டு இங்க ஊருக்குள்ள வீடு கட்ட மனைலா வாங்கி போட்ருக்காங்க.. இருக்க காட்டுலயும்  இந்த வருஷம் தண்ணி இல்லாம நெல்லும் போடல.... சொல்லி விட்டு பாட்டி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார்கள்.. எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை..

No comments:

Post a Comment